நாட்டில் அனைத்து தாதியர் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் தாதியர் கல்லூரி, பல்கலைக்கழகமாக மாற்றப்படுவது தொடர்பாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க விஷேட குழு நியமிக்கப்படவுள்ளது.
இக்குழுவை நியமிக்க 2023 மார்ச் 01ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை நேற்று (09) தெரிவித்தார்.
குறிப்பிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு, இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான கொள்கையளவிலான அனுமதியை பெற்றுக் கொடுக்கவும் அதற்கான சட்டவரைவை தயாரிப்பதற்கும் பதில் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் யோசனை முன்வைத்திருந்தார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
No comments:
Post a Comment