மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களினதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்புடன் மாகாணத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக டெங்கு செயலணியை துரிதமாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆளுநர், பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் பரவி வரும் புதிய டெங்கு பிறழ்வால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டெங்கு பாதிப்பு மற்றும் பரவுவதற்கான ஆபத்து காரணிகள் தொடர்பில் இலங்கையில் ஒன்பது மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில் திருகோணமலை மாவட்டத்தை தொடர்ந்து யாழ்ப்பாணம், கம்பஹா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான seroprevalence (டெங்கு நோய்க் காரணி) விகிதங்கள் பதிவாகியுள்ளன. பதுளையில் மிகக் குறைந்த செரோபிரவலன்ஸ் விகிதங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பது மாவட்டங்களில், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 5,208 சிறுவர்களில் வயது வரிசைப்படுத்தப்பட்ட seroprevalence விகிதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தெரிய வந்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ளார்.
குறித்த ஆய்விற்கு அமைய, சிறுவர்களிடையே ஒட்டுமொத்த டெங்கு நோய் பரவல் வீதம் (seroprevalence) 24.8% ஆக காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது அதிகூடிய வகையில் திருகோணமலையில் 54.3% ஆகவும், மிகக் குறைவாக பதுளையில் அதி உயர தோட்டப் பகுதியில் 14.2% ஆகவும் பதிவாகியுள்ளதாக குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, 3 வகைகளான பிறழ்வுகளாக டெங்கு அலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் பொதுமக்களிடம் சந்திம ஜீவந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment