கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீடு செய்யும் செயற்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் மேலும் மத்திய நிலையங்களை உருவாக்கி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட தாம் தயாரென, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
இதன்படி, உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு சபை நேற்று முன்தினம் (04) பிற்பகல் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிக்கும் எந்த நேரத்திலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக, பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்து, நாடு திரும்பியதன் பின்னர் கலந்துரையாடல் நடத்தப்படுமென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதுடன், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக விவுரையாளர் சங்கத்தின் நிறைவேற்று சபை, விடைத்தாள் மதிப்பீடு செய்யத் தீர்மானித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதியுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்த எதிர்பார்த்துள்ள கலந்துரையாடலை அடுத்த வாரம் ஒழுங்கு செய்யவுள்ளதாக, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்ரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் இதனை அறிவித்திருந்தது.
உழைக்கும்போதே வரி செலுத்தும் திட்டத்தை தளர்த்துமாறும் அல்லது அதற்கு ஈடான நிவாரணம் வழங்குமாறும் கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக உயர்தர விடைத்தாள் மதிப்பீடு செய்யும் செயற்பாடுகள் சுமார் இரண்டரை மாதங்கள் தாமதமாகின. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment