(இராஜதுரை ஹஷான்)
காலி முகத்திடலில் தோற்றம் பெற்ற போராட்டம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். மே 09 சம்பவம் தொடர்பில் அரசியல் தரப்பினர் வெளியிடும் கருத்துக்கள் இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் தன்மையில் காணப்படுகிறது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆளும் தரப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முறையான கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து, பணம் செலவழித்து ஆதரவு அளித்தவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும்.
மே 09 சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள் தற்போது புத்தகம் வெளியிடுகிறார்கள், பாதுகாப்பு பிரதானிகளின் மீதும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். தவறான கருத்துக்களால் இராஜதந்திர மட்டத்தில் பாதிப்பு ஏற்படும்.
காலி முகத்திடல் களத்தில் தோற்றம் பெற்ற போராட்டம் (அரகலய) மற்றும் அதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த முழுமையான அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஜனநாயகம் என்பதை முன்னிலைப்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகள் மாத்திரம் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்றன. நாட்டில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றுக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றது.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக போராட்டம் இடம்பெற்றது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். போராட்டத்தில் முன்னிலையில் இருந்து செயற்பட்டவர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் உள்ளார்கள் என்றார்.
போராட்டத்தின்போது இடம்பெற்ற வன்முறையின்போது முப்படையினரும் மௌனமாக செயற்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவர்களுக்கு யார் உத்தரவு பிறப்பித்தது என்பதும் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களை தூண்டி விட்டு நாட்டின் சகல செயற்பாடுகளையும் சீர்குலைத்த இந்த போராட்டத்தின் உண்மையான தகவல்களை கண்டறிந்து நாட்டை இந்த நிலைக்கு தள்ளிய நபர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment