காப்புறுதி பணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவருக்கு விளக்கமறியல் : நண்பரை தேடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 7, 2023

காப்புறுதி பணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவருக்கு விளக்கமறியல் : நண்பரை தேடும் பொலிஸார்

(எம்.வை.எம்.சியாம்)

காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 40 வயதுடைய மனைவியைக் கொலை செய்த 25 வயதுடைய சந்தேகநபரான கணவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிட்டிகல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எல்பிட்டிய பதில் நீதவான் துமிந்த லெய்வல முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

காலி, அதிமலே முகவரியில் வசிக்கும் 25 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்றும் தனது மனைவியின் 5 மில்லியன் ரூபாய் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக குறித்த பெண்ணின் கணவரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் பொலிஸார் கண்டுபிடித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி எல்பிட்டிய - பிடிகல பிரதான வீதியில் மாபலகம, நியகம பிரதேச செயலக அலுவலகத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண்ணின் கணவர் தனது நண்பரின் உதவியுடன் விபத்தை ஏற்படுத்தி அவரை கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்ததோடு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

மேலும் விபத்தை மேற்கொள்ள சந்தேகநபர் தனது நண்பருக்கு 2 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு வாக்குறுதியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் சில காலம் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு நாடு திரும்பியுள்ளதுடன் மேலும் அவரது பெயரில் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு ஆயுள் காப்புறுதிகள் இருந்துள்ளன.

காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தேகநபர் தனது நண்பருடன் இணைந்து விபத்தைத் திட்டமிட்டுள்ளதுடன் குறித்த பெண் தனது உறவினரை சந்திக்க சென்று கொண்டிருந்தபோது அவர் மீது லொறியை மோதச் செய்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்த குறித்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சந்தேகநபரின் நண்பராக கருதப்படும் லொறி சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு தற்போது பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment