மே தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு : பாதுகாப்பு கடமைகளில் 3500 பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Monday, May 1, 2023

மே தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு : பாதுகாப்பு கடமைகளில் 3500 பொலிஸார்

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல பகுதிகளிலும் திங்கட்கிழமை (1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டங்களை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தினால் கொழும்பு, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவான கூட்டங்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளமையால் அங்கு 3500 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு நகர், நுகேகொட, கண்டி, நுவரெலியா மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. குறித்த பிரதேசங்களில் வாகன போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெறவுள்ள மே தினக் கூட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சுகததாச உள்ளக அரங்கு, பொரளை கெம்பல் பார்க், பஞ்சிகாவத்தை சங்கராஜா மாவத்தை சந்தி, ஈ.ஏ.குணசிங்கபுர மைதானம், ஹெவ்லொக் வீதி - பம்பலப்பிட்டி பி.ஆர்.சி. விளையாட்டு மைதானம், எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை, செஞ்சிலுவை சந்தி, ஹைட் பார்க், கோட்டை புகையிரத நிலையம், பி.டி. சிறிசேன மைதானம் , நுகேகொடையில் தெல்கந்த சந்தி, நுகேகொட ஆனந்த சமகோன் அரங்கு உள்ளி பகுதிகளில் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிப்பது, வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தடையின்றி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊர்வலங்களை ஏற்பாடு செய்வோர் குறிப்பாக ஒரு பகுதி வீதியை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எற்கனவே அது தொடர்பில் இணப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் வீதியில் அடுத்த பகுதியில் போக்குவரத்து செய்யும் வாகனங்களுக்கு தடையேற்படுத்தாத வகையில் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை போதியளவு கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய மே தின ஏற்பாட்டாளர்கள் செயற்படுவது அவசியமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்த நேரத்தில் கூட்டங்களை ஆரம்பித்து உரிய நேரத்தில் அவற்றை நிறைவு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment