டிசம்பர் வரை காத்திருக்க முடியாது : மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 1, 2023

டிசம்பர் வரை காத்திருக்க முடியாது : மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு டிசம்பர் வரை காத்திருக்கும் நிலைப்பாட்டில் தேர்தல் ஆணைக்குழு இல்லை. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதோடு, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் பிரிதொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இம்மாதம் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்த போதிலும், குறித்த தினத்தில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என மீண்டும் அறிவித்துள்ளது.

இது குறித்து எதிர்த்தரப்பினரால் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து பேசவுள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் டிசம்பருக்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் என்ற கருத்தினையும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே இவ்விடயங்கள் தொடர்பில் வினவியபோது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன எம்மை அழைத்து கலந்துரையாடவுள்ளதாக அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதற்கமைய அடுத்த வாரம் இக்கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் இது குறித்து நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (4) தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நிதி நெருக்கடியானது தொடர்ந்தும் தேர்தலை நடத்துவதில் இடையூறாகக் காணப்பட்டால், அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவது இக்கலந்துரையாடலின் நோக்கமாக இருக்கும்.

தேர்தல்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் அவர்களின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயங்களைக் குறிப்பிட முடியும். அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் எமக்குத் தெரியாது. எது எவ்வாறிருப்பினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இயன்றவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். இதற்காக நிதி மற்றும் ஏனைய வசதிகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அரசாங்கம் அதன் பொறுப்பினை நிறைவேற்றுமானால், எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். இதற்காக டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு இல்லை என்றார்.

No comments:

Post a Comment