மக்களின் விருப்பத்துடன் புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சி - பொறுப்பதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

மக்களின் விருப்பத்துடன் புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சி - பொறுப்பதிகாரிகள் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைப்பதன் நோக்கம் முறையற்றது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், புகையிரத சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின், புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சட்ட திருத்தத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

புகையிரத தொழிற்சங்கங்களின் பிரதானிகளுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும், புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இதனையே எடுத்துரைத்தார்.

புகையிரத சேவை என்பது மக்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவை. ஆகவே, இலாபத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.

புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றினால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் அமைச்சர் உள்ளார். 

புகையிரத சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு திணைக்கள மட்டத்தில் தீர்வு காண முடியும். ஆனால், இதுவரை தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

புகையிரதங்கள் தற்போது அடிக்கடி தடம் புரள்கிறது. பயணிகள் புகையிரதத்துக்காக காத்துக் கொண்டிருக்கும்போது புகையிரத சேவை இரத்து செய்யப்படுகின்றன.

புகையிரத சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பை தோற்றுவித்து மக்களின் விருப்பத்துடன் புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைக்கும் நோக்கம் முறையற்றது என்றார்.

No comments:

Post a Comment