உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டால் எவரும் வீதிக்கு இறங்க முடியாது : பல விமர்சனங்கள் காணப்படுகிறது என்கிறார் ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 1, 2023

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டால் எவரும் வீதிக்கு இறங்க முடியாது : பல விமர்சனங்கள் காணப்படுகிறது என்கிறார் ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம். அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டால் அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எவரும் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்ட சட்டமூலம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியல் கட்சிகளை புறக்கணித்து உத்தேச பயங்கரவாத தடைச் சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சகல எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும் என நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறுதான் தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் இயற்றப்பட்டபோது குறிப்பிடப்பட்டது. ஆனால் இறுதியில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக தேசிய மற்றும் சர்வதேசத்தின் வலியுறுத்தலுக்கு அமைய புதிய சட்டத்தை உருவாக்குவதை விடுத்து நடைமுறைக்கு பொருத்தமற்ற வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அரசியல் தரப்பினரும், சிவில் அமைப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை காட்டிலும் இது மிகவும் பாரதூரமானது. நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பி அவசர அவசரமாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவதன் நோக்கம் என்ன?

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படும் ஒருவர் பொலிஸ் அதிகாரி முன்னிலையில் வழங்கும் வாக்குமூலத்தை நீதிமன்ற ஆதாரமாக கருத முடியாது என உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை சிறந்ததாக கருதப்படுகிறது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் 'பயங்கரவாதம்' என்ற பதத்திற்கு வரைவிலக்கணம் குறிப்பிடப்படவில்லை, ஆனால் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' என்ற பதத்திற்கு விரிவான வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை என்ற பதத்திற்குள் அரசாங்கம் எண்ணும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்க முடியும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவரை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சருக்கு உண்டு, இந்த அதிகாரம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பிரதிபொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட நபரை தடுப்பு காவலில் வைக்கும் காலத்தை நீடிக்க அனுமதி வழங்குமாறு பொலிஸார் முன்வைக்கும் கோரிக்கையை நீதவான் நீதிமன்றத்தால் புறக்கணிக்க முடியும், ஆனால் புதிய சட்டமூலத்தில் தடுப்பு காவல் காலத்தை நீடிப்பதற்கான காரணத்தை நீதவான் நீதிமன்றம் உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் வினவ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் இரு தரப்பிற்கும் இடையில் முரண்பாடான தன்மை காணப்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட சந்தேகநபரை எங்கு தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என நீதவான் நீதிமன்றம் தீர்மானித்தாலும், அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் சந்தேகநபர் 03 மாத காலத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்படும்போது அவர் 14 நாட்களுக்கு ஒருமுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர், முப்படை தளபதிகள் ஆகியோரின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியால் ஒரு பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிமுகப்படுத்த முடியும் என புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அறிவித்தல் அமுல்படுத்தப்படும் காலம் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய எந்தவொரு அமைப்பையும் ஒரு வருட காலத்திற்கு தடை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தடையை தொடர்ந்து நீடிப்பது, குறித்து மயக்க நிலை காணப்படுகிறது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் பல விமர்சனங்கள் காணப்படுகிறது, ஆகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment