இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இன்றி சட்டவாட்சியை ஸ்தாபிக்க முடியாது - விஜயதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, April 2, 2023

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இன்றி சட்டவாட்சியை ஸ்தாபிக்க முடியாது - விஜயதாச ராஜபக்ஷ

(எம்.மனோசித்ரா)

அபிவிருத்தி மற்றும் சட்டவாட்சி தொடர்பில் தொடர்ந்தும் பேசப்படுகின்ற போதிலும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இன்றி சட்டவாட்சியை ஸ்தாபிக்க முடியாது. எனவே மக்கள் மத்தியில் இனம், மதம், மொழி என்ற வேற்றுமையை அகற்றி சமரசப்படுத்தும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தை உருவாக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் அனுபவம் மற்றும் உத்திகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் மார்ச் 21 ஆம் திகதி தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், கடந்த வாரம் நானும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் தென் ஆபிரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, அந்நாட்டு ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ள தற்போதைய அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து தீர்க்கமான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தோம்.

குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்து அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தோம். அவர்களது சிறந்த அனுபவப் பகிர்வின் ஊடாக நாம் பல முக்கிய விடயங்கள் தொடர்பான தெளிவினைப் பெற்றுக் கொண்டோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்ட மூலத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் அபிவிருத்தி தொடர்பிலும், சட்டத்தின் ஆட்சி தொடர்பிலும் பேசிக் கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இன்றி எம்மால் இவற்றை வெற்றிகரமான இலக்கை நோக்கிக் கொண்டு செல்ல முடியாது.

எனவே மக்கள் மத்தியில் இலங்கையர் என்ற ரீதியில் இனம், மதம், மொழி என்பவை அவரவரின் தனிப்பட்ட உரிமைகள் என்பதால் அனைவரும் அனைத்தையும் மதித்து வாழும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறானதொரு சூழல் உருவாக்கப்படாமையின் காரணமாகவே தெற்கில் இரு சந்தர்ப்பங்களில் 60000 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, வடக்கிலும் யுத்தம் ஏற்பட்டு 60000 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால் பொருளாதாரம் சுமார் 30 - 40 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது.

எனவே நல்லிணக்கம் இன்றி எம்மால் எதனையும் செய்ய முடியாது. அதற்காக நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment