அரச சேவையாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை வழங்க அமைச்சரவை அனுமதி : ஜனக்க வகும்பர - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 4, 2023

அரச சேவையாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை வழங்க அமைச்சரவை அனுமதி : ஜனக்க வகும்பர

(எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்பர தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (04) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடியபோது ஆளும் தரப்பின் உறுப்பினர் ஜகத் குமார சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் இவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இவ்விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளோம்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 102 ஆவது உறுப்புரையின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளவர்கள் தேர்தல் இடம்பெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது, ஆகவே அவர்களை மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment