இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் சாபாநயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கடந்த ஜனவரி 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, அரசியலமைப்பின் 41 ஆ பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசியலமைப்புப் பேரவை கலந்துரையாடியிருந்ததுடன், அது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு ஆகியவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக 2015 - 2020 வரை பணியாற்றிய மஹிந்த தேசப்பிரிய தற்போது மீண்டும் அப்பதவிக்கு விண்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வந்த கோரிக்கைக்கு அமைய தாம் அப்பதவிக்கு விண்ணப்பித்ததாக, மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான புதிய நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுக்களுக்கு சுமார் 1,600 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2022 நவம்பர் 01 முதல் 2023 பெப்ரவரி 28 வரை மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய எல்லை நிர்ணயக் குழு தமது பணியை நிறைவு செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளது.
இக்குழு, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதியிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
No comments:
Post a Comment