தேர்தல் இல்லை என்பது ஜனநாயகம் இல்லை என்பதையே குறிக்கும் : கட்டம் கட்டமாகவேனும் நடத்தப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய - News View

About Us

About Us

Breaking

Friday, March 31, 2023

தேர்தல் இல்லை என்பது ஜனநாயகம் இல்லை என்பதையே குறிக்கும் : கட்டம் கட்டமாகவேனும் நடத்தப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

(எம்.மனோசித்ரா)

தேர்தல் இல்லை என்பது ஜனநாயகம் இல்லை என்பதையே குறிக்கும். எனவே நிதி நெருக்கடி தொடர்ந்தும் காணப்படுமானால் அதனை முகாமைத்துவம் செய்து, கட்டம் கட்டமாக வேண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். செப்டெம்பரில் உலக ஜனநாயக தினத்திற்கு முன்னரேனும் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்ப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்த முடியாது என்பது தெளிவாகியுள்ளது. உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாமையானது குற்றமாகும் என்பதோடு, கவலைக்குரியதுமாகும்.

இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும். தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றுக்கே இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான இயலுமை காணப்படுகிறது. மாறாக வேறு எவராலும் இதற்கான தீர்வினை வழங்க முடியாது.

நிதியை சேகரித்து தேர்தலை நடத்த முடியாதெனில், கட்டம் கட்டமாவேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். இன்று நாட்டில் சகல மாவட்டங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். மாகாண சபைகளும், இல்லை உள்ளூராட்சி மன்றங்களும் இல்லை.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இல்லை என்பது முக்கிய பிரச்சினையாகும்.

மாகாண சபை ஆளுனர்கள் மற்றும் செயலாளர்களே இவற்றை ஆட்சி செய்கின்றனர். இந்த நிலைமையை விரைவில் மாற்றுவதற்காக அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன இணைந்து செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

தேர்தல் நடத்தப்படாமையால் பிரதிநிதித்துவ ஜனநாயகம் அற்றுப்போகும் அபாயம் உள்ளது. தேர்தல் இல்லை என்பது ஜனநாயகம் இல்லை என்பதையே குறிக்கிறது. எனவே குறைந்தபட்சம் ஆகஸ்டில் உலக இளைஞர் தினத்திற்கு முன்னதாக அல்லது செப்டெம்பரில் உலக ஜனநாயக தினத்திற்கு முன்னதாகவேனும் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment