தனியார் மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை, நீதிமன்றத்தை நாடுவோம் - சந்திம வீரக்கொடி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 30, 2023

தனியார் மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை, நீதிமன்றத்தை நாடுவோம் - சந்திம வீரக்கொடி

(இராஜதுரை ஹஷான்)

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையாக காணப்பட வேண்டும். இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை. நீதிமன்றத்தை நாடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலி பகுதியில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளாமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என எதிர்க்கட்சிகளின் ஒரு சில உறுப்பினர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் பலமுறை சுட்டிக்காட்டினோம். நிதி நெருக்கடி இல்லை என குறிப்பிட்டு தன்னிச்சையாக செயற்பட்டார்கள், இறுதியில் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் ஒரு சிலவற்றை தாராளமாக செயற்படுத்தலாம். நட்டமடையும் அரச நிறுவனங்கள மறுசீரமைக்கும் பணிகள் வெளிப்படைத் தன்மையாக காணப்பட வேண்டும். மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சிக்கிறது.

அரச நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முறையற்ற வகையில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. சகல தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் அதனை விடுத்து தன்னிச்சையாக செயற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

No comments:

Post a Comment