குழந்தைகளின் கல்வி நிலையை மேம்படுத்த சிறப்புத் திட்டம் : சமூக ஒழுக்கக்கேடுகளை தடுப்பதிலும் கவனம் - அமைச்சர் பிரசன்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, March 2, 2023

குழந்தைகளின் கல்வி நிலையை மேம்படுத்த சிறப்புத் திட்டம் : சமூக ஒழுக்கக்கேடுகளை தடுப்பதிலும் கவனம் - அமைச்சர் பிரசன்ன

நகர்ப்புற குடியிருப்புகளில் வாழும் குழந்தைகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், நகர்ப்புற குடியேற்றங்களில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக ஒழுக்கக்கேடுகளை தடுக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

பத்தரமுல்லை செத்சிறிபாய கேட்போர் கூடத்தில் இன்று (2) நடைபெற்ற “சுவென் சிட்டிமு - லஸ்ஸன வெமு” மற்றும் “சுவதி தியனிய" ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் பணிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கிறது. அதற்காக அந்த நிதியத்திற்கு நன்றி கூறுகிறோம்.

இந்த ஆண்டு, நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையானது குறைந்த வசதியுடைய மக்களுக்காக பல சுகாதார மேம்பாடு, கல்வி, சமூக நடவடிக்கை, மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை செயல்படுத்தியுள்ளது.

குறிப்பாக கல்வித் திட்டங்களின் கீழ் ஜப்பானிய மொழி உள்ளிட்ட மொழி மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், போதைப் பொருள் தடுப்பு திட்டங்கள், சமூக சங்கங்களை நிறுவுதல், சுற்றுச்சூழல் திட்டங்கள் போன்றவையும் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் நகர குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என நம்புகிறோம்.

நகர குடியிருப்புகளில் வாழும் உங்களைப் புதிய உலகில் வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்க விரும்புகிறோம். அதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தடைகளை பொருட்படுத்தாது பாடுபடும் என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போது, ​​நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நாடளாவிய ரீதியில் இயங்கும் நகரக் குடியிருப்புகளின் எண்ணிக்கை 22 ஆகும். கொழும்பு, கம்பஹா, கடுவெல, அனுராதபுரம், மஹியங்கனை ஆகிய நகரங்களை அண்மித்த பகுதிகளில் இவை இயங்கி வருவதாக நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நகர குடியிருப்புகளில் உள்ள 200 பிள்ளைகளுக்கு சுகாதார உபகரணச் சோடிகளும் வழங்கப்பட்டன. நகர்ப்புற குடியிருப்புகளில் வசிக்கும் 3,000 குழந்தைகளுக்கு 10 கட்டங்களின் கீழ் சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) 5.7 மில்லியன் ரூபாவை வழங்கியது.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் உள்ளூர் நிரந்தரப் பிரதிநிதி டகாஹோ ஃபுகாமி, சுகாதார அமைச்சின் தோட்டப்புற மற்றும் நகரத் துறையின் விசேட நிபுணர் டொக்டர் உபுலி பெரேரா, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் , நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி அஷாந்தி பலபிட்டிய, நிமேஷ் ஹேரத், நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க, பணிப்பாளர் நாயகம் விஜயானந்த ஹேரத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

No comments:

Post a Comment