அரசாங்கத்தின் இடையூறுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுங்கள் : தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 1, 2023

அரசாங்கத்தின் இடையூறுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுங்கள் : தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, வெகுவிரைவில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் செவ்வாய்க்கிழமை (28) தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை, சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சந்திப்பு இராஜகிரியவில் உள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா, சட்டத்தரணி சுனில் வடகல, வைத்தியர் நிஹால் அபேசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உட்பட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நிதி இல்லை என்பது அடிப்படையற்றதாகும். தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் செயற்பாடுகள் நிறைவு பெறும் தருணத்தில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 09 ஆம் திகதி (மார்ச்) நடத்த இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளதால் வேட்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக அரச சேவையாளர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள். இவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடியின் காரணமாகவே தேர்தல் பணிகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்தும் திகதி மூன்றாம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அரச நிறுவனங்கள் ஊடாக திட்டமிட்ட வகையில் இடையூறு விளைவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தேசிய தேர்தல் ஆணைக்குழு ஏன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார். இதனை தனது வலியுறுத்தலாக கருதுமாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். ஆகவே புதிதாக ஒரு சிக்கலை ஏற்படுத்தாமல் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்மானத்தை எடுக்க அவதானம் செலுத்தியுள்ளோம் என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை கிடையாது, அவருக்கு மக்களாணை தொடர்பில் அக்கறை கிடையாது, நாட்டு மக்கள் தேர்தலை கோருகிறார்கள்.

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மாதக் கணக்கில் வரையறுக்காமல், நாட் கணக்கில் வரையறுத்து தேர்தல் திகதியை அறிவிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment