(எம்.மனோசித்ரா)
நாட்டில் சுமார் 5000 - 6000 காச நோயாளர்கள் தமக்கு காச நோய் இருப்பதை கண்டறியாமல், சிகிச்சை பெறாமலிருக்கின்றனர். இவர்கள் சமூகத்தில் ஏனையோருக்கும் காச நோயை பரப்புபவர்களாகக் காணப்படுகின்மையால் இன்று காச நோய் இலங்கையில் பிரதான பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காச நோய் என்பது சுவாசத் தொகுதியை அடிப்படையாகக் கொண்டதாகும். பக்ற்றீரியா தொற்றின் மூலம் ஏற்படும் இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே இனங்கண்டு, முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டால் அதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
இலங்கையில் புதிய காச நோயாளர்கள் இனங்காணப்படும் வீதமானது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மதிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விடக் குறைவானதாகும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீட்டுக்கமைய 13,500 புதிய காச நோயாளர்கள் இனங்காணப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் 7000 - 9000 காச நோயாளர்களே இனங்காணப்படுகின்றனர்.
இதன் அர்த்தம் 5000 - 6000 காச நோயாளர்கள் தமக்கு காச நோய் இருப்பதை அறியாது, சிகிச்சை பெறாமலுள்ளனர் என்பதாகும்.
இவர்கள் ஏனையோருக்கும் காச நோயை பரவச் செய்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக காச நோயானது இலங்கையின் பொது சுகாதார பிரச்சினையாகியுள்ளது.
மார்ச் 24ஆம் திகதி சர்வதேச காச நோய் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. '2035 இல் காச நோயற்ற நாடாக இலங்கையை மாற்றியமைப்போம்' என்ற தொனிப்பொருளின் கீழ் சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment