ஏப்ரல் 3ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 30, 2023

ஏப்ரல் 3ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானம்

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த வாரம் முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் வியாழக்கிழமை (30 ) தொழிற்சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வங்கி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் சங்கத்தின் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் திலங்கசிங்க தெரிவிக்கையில், 'வரிக் கொள்கை தொடர்பில் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு இறுதிக் கடிதத்தினை அனுப்ப தீர்மானித்துள்ளோம்.

ஏப்ரலுக்குள் எமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி ஏப்ரல் 3ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடமும் கலந்துரையாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது நாட்டின் உண்மை நிலைவரத்தை நாம் நாணய நிதியத்திற்கு தெளிவுபடுத்தினோம்.

எமது பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வினையேனும் எதிர்பார்க்கின்றோம். அதற்கமைய அடுத்த வாரம் எம்மால் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானதாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment