தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகலை பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி உயிரிழந்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டு அவர்களை கலைக்க முற்பட்ட வேளையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, அக்கட்சியின் இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகலை பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி (61) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதில் ஒருவரான நிமல் அமரசிறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியினால் நேற்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு, ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் பகுதி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை சுற்றுவட்ட பிரதேசத்திற்குள் பிரவேசிக்க கொழும்பு கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றங்களால் தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த பேரணிக்கு இப்பன்வல சந்தி, மற்றும் நகர மண்டபம் பகுதிகளில் பொலிஸார் இரு தடவைகள் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புபுகை பிரயோகம் மேற்கொண்டு கலைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு - கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் அப்பகுதியில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் இதன்போது 28 பேர் காயமடைந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
No comments:
Post a Comment