சீனாவின் உத்தரவாதம் குறித்து வெளியிடப்படும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை - ஷெஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

சீனாவின் உத்தரவாதம் குறித்து வெளியிடப்படும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை - ஷெஹான் சேமசிங்க

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான சீனாவின் நிதியியல் உத்தரவாதம் குறித்து வெளியிடப்படும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை இந்தியா மாத்திரமே எழுத்து மூலம் வழங்கியிருப்பதுடன் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளும் தமது நிதியியல் உத்தரவாதத்தை வாய் மொழி மூலம் வழங்கியுள்ளன. அதேவேளை சீனாவும் வெகுவிரைவில் இந்த உத்தரவாதத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடனை மீளச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்கல், கடன் நிறுத்தம், மீள் நிதியுதவி என்பன குறித்து கடன் வழங்குனர்கள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

'சீனா உத்தரவாதம் வழங்குவதற்கு முன்னர் அது குறித்து கருத்துக்களை வெளியிடுவதென்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.

நாம் அனைத்துக் கடன் வழங்குனர்களிடமும் வெளிப்படைத் தன்மையுடனும் பக்கச்சார்பின்றியும் நடந்து கொள்வோம்' என்று ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

'நாம் இந்தியாவிடமிருந்து நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றிருப்பதுடன், வெகுவிரைவில் பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகளும் எமக்கு அவசியமான உத்தரவாதத்தை வழங்குமென எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று சீனாவிடம் பகுதியளவிலான உத்தரவாதம் பெறப்பட்டிருக்கின்றது. அது சர்வதேச நாணய நிதியத்தின் தேவைப்பாடுகளுக்கு உட்பட்டதா? இல்லையா? என்பதை சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்யும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உயர்வான வரி அறவீடு, உயர் பண வீக்கம், குறைந்த வருமானம், அதிக வட்டி வீதம் மற்றும் தொழில் இழப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், நாடு மீண்டும் மீட்சியடைவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment