குரைக்கும் நாய் கடிக்காது என்கிறார் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

குரைக்கும் நாய் கடிக்காது என்கிறார் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர்

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் அழுத்தங்களினால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது. மின்சாரத்துறை அமைச்சரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. என்னை பதவி நீக்குவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அறிவார்ந்த ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமித்தால் இணக்கமாக செயற்பட முடியும். குரைக்கும் நாய் கடிக்காது என எண்ணிக் கொண்டு செயற்படுகிறோம் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செயற்படுகிறார்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்து மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.

நியாயமான மின் கட்டணத்தை பரிசீலனை செய்யலாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம். மின்சார சபையின் விருப்பத்திற்கு அமைய மின் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க முடியாது.

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இரவு 07 மணிக்கு பிறகு மின் விநியோக தடையை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தும், அந்த தீர்மானத்தை இலங்கை மின்சார சபை செயற்படுத்தவில்லை.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இரவு வேளையில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம், மாற்று வழிமுறைகளை பின்பற்றுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மின்சார சபை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடுகிறார். அரசியல்வாதிகளின் ஆலோசனைகளுக்கும், தீர்மானத்திற்கும் அமைய சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்பட முடியாது.

மின்சாரத்துறை, சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் அடிப்படை அறிவில்லாதவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமித்துள்ளதால் நாட்டின் மின் கட்டமைப்பும், சுயாதீன ஆணைக்குழுக்களும் பெரும் நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. அரசியல்வாதிகளின் அழுத்தங்களினால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை தற்போது காணப்படுகிறது.

பரீட்சை இடம்பெறும் காலத்தில் தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் மேலதிகமாக 3 பில்லியன் ரூபா தேவை என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றதாகும்.

எரிபொருள் மற்றும் நிலக்கரி ஊடான மின்னுற்பத்தியை காட்டிலும் தற்போது நீர் மின்னுற்பத்தி அதிகளவில் இடம்பெறுகிறது. பரீட்சை காலத்தில் நீர் மின்னுற்பத்தி ஊடாக தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.

பரீட்சை காலத்தில் கூட மின்சாரத்தை தடையில்லாமல் விநியோகிக்க மின்சாரத்துறை அமைச்சர் இடமளிக்காமல் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மத்தியில் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளார்.

எனது அரசியல் பயணம் தொடர்பில் கருத்துரைக்க மின்சாரத்துறை அமைச்சருக்கு தகுதி இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் சபை ஆகிய அரசியல் தரப்புக்களுடன் எனக்கு எவ்வித தொடர்புமில்லை.

என்னை பதவி நீக்குவதால் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. பதவி என்பது நிலையற்றது. அறிவார்ந்த ஒருவரை அமைச்சராக நியமித்தால் அவருக்கு துறைசார் விடயங்களை தெளிவுப்படுத்த வேண்டிய தேவை ஏனைய தரப்பினருக்கு கிடையாது.

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சருக்கு துறைசார் திறமை கிடையாது, வழங்கும் ஆலோசனைகளை அவர் ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக செயற்படுகிறார். சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கிறார். குரைக்கும் நாய் கடிக்காது என நினைத்துக் கொண்டு செயற்படுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment