(எம்.ஆர்.எம்.வசீம்)
தேர்தல்களின்போது கூட்டணி அமைப்பது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட பல பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் அனுமதிகோரி இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு ஆலோசித்து வருகின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தல் ஒன்றுக்கு தற்போது செல்வது பொருத்தம் இல்லை.
என்றாலும் தேர்தலுக்கு வேட்பு மனு கோரினால் எந்தத் தேர்தலுக்கும் முகம்கொடுக்கத் தயார் என்பதை நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் தேர்தலுக்கு பயந்து ஒதுங்கியதில்லை.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பொதுஜன பெரமுன கடசி தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை. வேறு யாருடனும் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கவில்லை.
ஆனால் பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் எங்களிடம் வேட்பு மனு பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் கதைத்திருக்கின்றனர்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தொகுதிக்காக அமைப்பாளர்களை நியமிக்க நாங்கள் தற்போது விண்ணப்பம் கோரி இருக்கின்றோம். பத்திரிகைகளில் அது தொடர்பான விளம்பரங்கள் பிரசுரமாகி இருக்கின்றன. அதன் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். இது தொடர்பான நேர்முகப் பரீட்சை நாளை முதல் கட்சி தலைமையகத்தில் இடம்பெற இருக்கின்றது.
No comments:
Post a Comment