ஒளிந்து பிடித்து விளையாடிய சிறுவன் 6 நாட்களின் பின் மற்றொரு நாட்டில் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

ஒளிந்து பிடித்து விளையாடிய சிறுவன் 6 நாட்களின் பின் மற்றொரு நாட்டில் மீட்பு

பங்களாதேஷில் நண்பர்களுடன் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், கப்பல் கொள்கலன் ஒன்றில் சிக்கிக் கொண்ட நிலையில் 6 நாட்களின் பின் வேறொரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

பாஹிம் எனும் 15 வயதான இச்சிறுவன், பங்களாதேஷின் துறைமுக நகரான சிட்டாகொங்கில் கடந்த 11 ஆம் திகதி நண்பர்களுடன் ஒளிந்துபிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

கொள்கலன் ஒன்றுக்குள் அவன் ஒளிந்து கொண்டிருந்தபோது, தற்செயலாக அவன் அக்கொள்கலனின் கதவை உட்புறமாக அடைத்து விட்டான். பின்னர் அவன் அதற்குள் உறங்கி விட்டான்.

அக்கொள்கலன் வணிகக் கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு, மலேஷியாவின் வெஸ்ட்போர்ட் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டது. கடந்த 17 ஆம் திகதி கொள்கலனுக்குள் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். 6 நாட்களில் 3,700 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் அவன் சென்றிருந்தான்.

கொள்கலனுக்குள் இச்சிறுவன் மாத்திரமே காணப்பட்டான் என மலேஷியாவின் உள்துறை அமைச்சர் தட்டுக் சேரி சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இச்சிறுனுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது எனவும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

மனிதக் கடத்தல் நடவடிக்கையால் இச்சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் முதலில் கருதினர். எனினும், அவன் ஒளிந்து பிடித்து விளையாடிய நிலையில் கொள்கலனுக்குள் சிக்கிக் கொண்டமை தெரியவந்தது.

இச்சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், அவனை சட்டபூர்வமான வழியில் பங்களாதேஷுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment