யாழில் டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

யாழில் டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக்குழுக் கூட்டம், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) நடைபெற்ற போதே மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை குறிப்பிட்டார்.

இந்த வருடம் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களாக 3,294 பேர் பதிவாகியுள்ளதுடன் 09 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

தற்போது பருவப் பெயர்ச்சி மழைக் காலம் என்பதால் டெங்கு நோய்ப் பரவல் அதிகமாகவுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3,4,5 ஆம் திகதிகளை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக அறிவித்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

தற்போதைய காலநிலையினால் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோய்ப் பரவலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்று மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்

வைத்திய கலாநிதி எஸ். சிவகணேஸ் மற்றும் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment