ஒரு மின் அலகிற்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

ஒரு மின் அலகிற்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசம்

(இராஜதுரை ஹஷான்)

மின் கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை திருத்தம் செய்யவும், ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை மின்சார சபையின் பரிந்துரைக்கு அமைய கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. எமது பரிந்துரைக்கு அமைய மின் கட்டணத்தை திருத்தம் செய்திருந்தால் இன்று இரண்டரை மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவை ஏற்படாது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான 20 விடயங்கள் அடங்கிய யோசனையை மின்சாரத்துறை அமைச்சு அடுத்த மாதம் அமைச்சரவையில் முன்வைக்கும். கட்டண திருத்தத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையால் மாத்திரம் தனித்து செயல்பட முடியாது.

மின் கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒரு மின் அலகிற்கு தற்போது 29.14 ரூபா அறவிடப்படுகிறது. தற்போதைய உற்பத்தி செலவுக்கு இந்த தொகை சாத்தியமற்றதாக உள்ளது. அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி செலவுகளை அடிப்படையாக கொண்டு ஒரு மின் அலகு உற்பத்திக்கு 48.42 ரூபா செலவாகும், ஆகவே ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment