சுதர்ஷனியின் அறிவிப்பே உண்மை, மீண்டும் இணையுமாறு அழைப்பு என்கிறார் அநுர பிரியதர்ஷன யாப்பா - News View

About Us

About Us

Breaking

Saturday, November 26, 2022

சுதர்ஷனியின் அறிவிப்பே உண்மை, மீண்டும் இணையுமாறு அழைப்பு என்கிறார் அநுர பிரியதர்ஷன யாப்பா

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக இணக்கப்பாட்டுடன் செயற்படுவதே எமது நோக்கம். இதனை ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாம் இணைந்து விட்டதாகக் கருத முடியாது. பழைய சுதந்திர கட்சியை மீளக் கட்டியெழுப்புவதையே நாம் விரும்புகின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகவில்லை என்றும், புதியதொரு கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை என்பதாலும் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்காலத்தில் நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவோமா இல்லையா என்பதை தற்போது கூற முடியாது. எதிர்காலம் தொடர்பில் எம்மால் எதனையும் கூற முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளை வெளியிட்ட அறிவித்தலே உண்மையானது. நாம் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதாக மாத்திரமே அவர்கள் அறிவித்தனர். என்னுடன் 6 பேர் சுயாதீனமாக செயற்படுகின்றனர். பொதுஜன பெரமுனவினால் எம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்க முடியாது.

நாம் கட்சியிலிருந்து வெளியேறவில்லை. சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றோம். வேறொரு கட்சியை உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு எமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்?

பொதுஜன பெரமுனவிலிருந்து நீக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்பது தொடர்பில் எனக்கு துளியளவும் அச்சமில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மீண்டும் இணையுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கட்சித் தலைவர் இது தொடர்பில் எம்முடன் கலந்துரையாடியுள்ளார்.

எமது பழைய சுதந்திர கட்சியை மீளக் கட்டியெழுப்புவதையே நாம் விரும்புகின்றோம். பாராளுமன்றம் கலைக்கப்படுவதை நான் விரும்புகின்றேன். மக்களுக்கு புதிய தெரிவுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment