காணிகளை மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதன் மூலமே பெருந்தோட்டங்களை பாதுகாக்கலாம், இல்லாவிட்டால் வேலை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள் என்கிறார் திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

காணிகளை மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதன் மூலமே பெருந்தோட்டங்களை பாதுகாக்கலாம், இல்லாவிட்டால் வேலை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள் என்கிறார் திகாம்பரம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பெருந்தோட்ட காணிகளை அந்த மக்களுக்கு பிரித்துக் கொடுத்து, அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதன் மூலமே பெருந்தோட்டங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள் என திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழைமை (30) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் அமைச்சு, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பெருந்தோட்டத்தில் வாழும் மக்கள் இந்தியாவில் இருந்து வந்து அடுத்த வருடத்துடன் 200 வருடங்கள் ஆகின்றன. அதில் 5 இலட்சம் மக்களில் ஒரு இலட்சத்தி 40 ஆயிரம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். அந்த மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் அந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். வீடமைப்பை ஆரம்பித்து வீடுகளை கட்டிக் கொடுத்தோம். பிரதேச சபைகளை அதிகரித்தோம். இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது எமது அரசாங்கம் இல்லாமல் போனதால் அந்த வேலைத்திட்டங்களை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. அதனால் அந்த மக்கள் மிகவும் கஷ்டத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தோட்டக் கம்பனிகள் தேயிலை தோட்டங்கள் தொடர்பில் பார்ப்பதில்லை. அவர்களுக்கு தேயிலை கொழுந்துவந்தால் போதும் என்ற நிலையேயே இருக்கி்ன்றனர்.

சிறுதோட்ட தொழிற்சாலைகளில் 75 வீத தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டங்களில் 25 வீத ஏற்றுமதியே மேற்கொள்ளப்படுகின்றது. கம்பனிகள் தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.

மேலும் பெருந்தோட்டங்களில் இருக்கும் மக்கள் இன்று தோட்டங்களை விட்டு, கொழும்புக்கு வருகின்றார்கள். அதேபோன்று வெளிநாட்டுக்கு செல்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்.

அதனால் அந்த மக்களுக்கு பெருந்தோட்ட காணிகளை பிரித்துக் கொடுத்து, அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதன் மூலமே பெருந்தோட்டங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்த ஆயிரம் ரூபாவைக்கூட இன்னும் வழங்கவில்லை. தேயிலை தோட்டங்களை அழித்துவிடவே கம்பனிகளுக்கு தேவையாக இருக்கின்றதன. அதனால் அரசாங்கம் விரைவாக பெருந்தோட்டங்களை தோட்ட மக்களுக்கு பிரித்துக் கொடுத்தால்தான் பெருந்தோட்டங்களை பாதுகாக்க முடியும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன், நாட்டுக்கு அன்னியச் செலாவணியை அதிகம் பெற்றுக் கொடுக்கும் பெருந்தோட்டங்கள் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் அந்த மக்களுக்கு எந்த நிவாரணமும் வரவு செலவு திட்டத்தில் இல்லை. குறைந்தபட்சம் கோதுமை மாவுக்காவது மாநியம் வழங்க வேண்டும் என்றார்.

இதன்போது சபையில் இருந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அதற்கு பதிலளிக்கையில், மலையக மக்கள் மிகவும் கஷ்டத்துடனே வாழ்ந்து வருகின்றனர் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். சம்பள அதிகார சபை ஊடாக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். என்றாலும் கம்பனிகள் அதற்கு இணங்கவில்லை. தற்போது கூட்டு ஒப்பந்தமும் இல்லை. அவர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

அத்துடன் ஆர்.பி.சி. கம்பனிகளில் இருந்து பயன்படுத்தாத காணிகளை மீண்டும் அரசாங்கம் பொறுபேற்றுக் கொண்டு, நீங்கள் தெரிவிப்பதுபோல், பிரித்துக் கொடுப்பது போன்ற முறையை பயன்படுத்த அமைச்சரவை அனுமதியை பெற்றிருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment