இந்தியாவுக்கு யாத்திரை செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

இந்தியாவுக்கு யாத்திரை செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனை

இந்தியாவுக்கு தல யாத்திரைகள் செல்ல இருப்பவர்கள் சுகாதார முற்பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றி மலேரியா தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை 2016 ஆம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மலேரியாத் தொற்று பரவவில்லை.

எனினும் கடந்த ஆண்டுகளில் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் போன்ற வேறு நாடுகளில் இருந்துவரும் பயணிகளில் மலேரியா தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ளனர். இது மலேரியா அற்ற நாடாக எமது நாட்டை பேணுவதில் நாம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாகும்.

எனவே மலேரியா நோய் அதிகம் காணப்படுகின்ற இந்தியா போன்ற நாடுகளுக்கு ஜப்பான் தல யாத்திரைக்கோ அல்லது வேறு தல யாத்திரைகளுக்கோ செல்பவர்கள் முற்காப்பாக தடுப்பு மருந்துகளை ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே உரிய முறையில் உள்ளெடுப்பதன் மூலம் தமக்கு மலேரியா தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

எனவே, இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மலேரியா நோயில் இருந்து தம்மை காத்துக் கொள்வதற்காக தமது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்வதன் மூலம், அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது சுகாதார கிராமம், பண்ணையில் அமைந்துள்ள பிராந்திய மலேரியா தடை இயக்க பணிமனையிலோ (தொலைபேசி இலக்கம் 021- 222 7924) தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் இவர்கள் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் நாடுகளில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தடுப்பு மருந்துகளை தொடர்ந்து உள்ளெடுப்பதோடு பயணம் நிறைவுற்று நாடு திரும்பிய பின்பும் நான்கு வாரங்கள் நிறைவுறும் வரை வாரத்திற்கு ஒருமுறை தடுப்பு மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.

அவ்வாறே ஒரு வருடத்திற்குள் காய்ச்சல் ஏற்படின் உங்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தங்கள் பயணம் தொடர்பான விபரங்களை வைத்தியருக்கு வழங்குவதுடன் மலேரியா நோய்க்காக குருதியினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மேலும், இவ்வாறான பயணங்களை மேற்கொள்ளும் யாராவது குருதிக் கொடையாளர்களாக இருந்தால் மூன்று வருடங்களுக்கு இரத்ததானம் வழங்க முடியாது.

மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் பெருமளவாக எமது பிரதேசத்தில் காணப்படுகின்றன. மேலும் அண்மைக்காலங்களாக நகர்ப்புற மலேரியாவை பரப்பக்கூடிய அனோபிலிஸ் ஸ்டெபென்சி வகை நுளம்புகளும் எமது பிரேதேசங்களில் காணப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையானது மலேரியா நோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் வகை ஒட்டுண்ணிகளை மனித உடலிலிருந்தும் அதை காவிப்பரப்பும் நுளம்புகளில் இருந்தும் ஒழித்ததன் மூலமே மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எனவே காவிகள் பெருமளவாக காணப்படும் எமது பிரதேசத்தில் மலேரியா நோய்க்கான ஒட்டுண்ணியுடன் ஒருவர் இருந்தாலே அவ் இடத்தில் மலேரியா மீண்டும் விரைவாக பரவும் அபாயம் உள்ளது.

உங்களில் அல்லது தெரிந்தவர்களில் யாராவது இந்தியா, போன்ற நாடுகளுக்கு தல யாத்திரைகள் சென்று வந்திருப்பின் அருகில் உள்ள வைத்தியசாலைகள் ஏதேனும் ஒன்றில் அல்லது சுகாதார அதிகாரி காரியாலயத்தை அணுகி மலேரியா நோய்க்கான குருதிப் பரிசோதனையை செய்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்போம் என்றுள்ளது.

No comments:

Post a Comment