(நா.தனுஜா)
அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் உள்ளிட்ட தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது ஓர் உரிமையேயன்றி, அதுவோர் சலுகையல்ல. எனவே அந்த உரிமைக்கு இடமளிக்க வேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு இருக்கின்றது என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு மக்கள் மீது அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து புதன்கிழமை கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதற்கு பொலிஸார் அனுமதி வழங்க மறுத்திருந்த நிலையில், அதனைக் கண்டித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.
அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்றையதினம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க பொலிஸார் மறுத்துள்ளமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் போன்ற தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
இப்போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுப்பதற்கான காரணமாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ள விடயங்கள், அமைதிப் போராட்டங்கள் மீது மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவசியமான சர்வதேச சட்ட நியமங்களைப் பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக இப்போராட்டங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில் பெரும்பாலான கூட்டங்கள் அன்றாட வாழ்க்கையிலோ அல்லது ஏனையோரின் உரிமைகளிலோ குறித்தளவிலான தடங்கல்களை ஏற்படுத்தும் என்பதே அதன் இயல்பாகும். அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது ஓர் உரிமையாகும். மாறாக அதுவோர் சலுகை அல்ல. எனவே இந்த உரிமைக்கு இடமளிக்க வேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு உண்டு என்று மன்னிப்புச் சபை அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும் என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், எனவே மக்கள் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பித்தக்கது.
No comments:
Post a Comment