மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச காணிகள் தொடர்பில் விசேட கூட்டம் : மூன்று வாரங்களுக்குள் விடுவிக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச காணிகள் தொடர்பில் விசேட கூட்டம் : மூன்று வாரங்களுக்குள் விடுவிக்க தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான அரச காணிகளை வன வளத் துறையிடமிருந்து விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று (29) இடம்பெற்றது.

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 'மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கென அடையாளம் காணப்பட்ட அரச காணிகளை வன வளத் துறையிடம் இருந்து விடுவித்தல்' என்ற தீர்மானத்திற்கு அமைவாக கமத்தொழில் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பங்கேற்புடன் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது நாடளாவிய ரீதியிலுள்ள அரச காணிகளை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை அதிகரிப்பதன் அவசியம் தொடர்பிலும் 2019 ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வன வளத்துறை தொடர்பிலான வர்த்தமானியால் உற்பத்தி மற்றும் விவசாய துறையில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கள விஜயத்தினை முன்னெடுத்து மேற்குறித்த நோக்கங்களுக்கென அடையாளம் காணப்பட்ட காணிகளை வன வளத் துறையிலிருந்து விடுவிப்பது என்கின்ற தீர்மானமும் அமைச்சரினால் எட்டப்பட்டது.

இதன் மூலம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் சுமார் 380 ஏக்கருக்கும் அதிகமான இறால் வளர்ப்பு திட்டங்கள், மாவட்டத்தின் பல பாகங்களிலும் செய்கை இடம்பெறாமல் காணப்படுகின்ற 1000 ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகள், கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அமையவுள்ள மீன் மற்றும் இறால் வளர்ப்புத் திட்டங்கள் என பல விவசாய மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன் மூலம் மாவட்டத்துக்கான வருமானத்தினை அதிகரிக்க முடிவதுடன் பல தொழில் முயற்சிகளையும் இளம் சந்ததியினருக்கு உருவாக்கி கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களிலும் பல சந்திப்புக்களை வனசீவராசிகள் மற்றும் வனவ ளங்கள் பாதுகாப்பு அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் முன்னெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் கமத்தொழில் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.எம்.சி.எம்.ஹேரத், வனப் பாதுகாவலர் நாயகம் வைத்திய கலாநிதி கே.எம்.ஏ. பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கருணாகரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தட்சண கௌரி தினேஷ், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் செல்வி ரகுகுலநாயகி, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகரன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் ராஜ்பாபு, கோறளைப்பற்று வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் பிரணவன், மாவட்ட நீர் உயிரினவளப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் கே. பிரதீப் என துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment