225 பேரையும் நம்பி நமக்கு நாமே குழி தோண்டிக் கொண்டோம் : வாக்களிக்க விருப்பமில்லை என்பதை இணைத்துக் கொள்ளவும் - தம்மரத்ன தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 1, 2022

225 பேரையும் நம்பி நமக்கு நாமே குழி தோண்டிக் கொண்டோம் : வாக்களிக்க விருப்பமில்லை என்பதை இணைத்துக் கொள்ளவும் - தம்மரத்ன தேரர்

(இராஜதுரை ஹஷான்)

அரச தலைவர்கள் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. இலங்கை ஏழ்மையான நாடு என 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவித்துள்ளார்கள். நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளார்கள், ஆகவே 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நடுத்தர மக்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என மிகிந்தலை விகாரையின் விகாராதிபதி வலபெனாங்குனவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் எந்த அரசியல் கட்சி ஊடாக வந்தாலும் அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வதை நாட்டு மக்கள் அழுத்தமாக புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மிகிந்தலை விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச தலைவர்கள் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. நாட்டை நாசப்படுத்திய அரச தலைவர்கள் மக்களின் நலன் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. தமது நலன்களை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுகிறார்கள்.

விவசாயத்துறையில் தன்னிறைவடைந்த இலங்கையை சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் சூடான் போன்ற நாடுகளை போல் வறிய நிலைக்கு உள்ளாக்கிய பொறுப்பை அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும்.

இலங்கை ஏழ்மையான நாடு என 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உலகிற்கு அறிவித்துள்ளார்கள்.

நாட்டை இல்லாதொழித்த 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் வாக்கு கேட்டு வர முடியாது. 75ஆவது சுதந்திர தினத்தை எந்த கௌரவத்துடன் கொண்டாட முடியும்.

யாசகம் பெற்று நாட்டை நிர்வகிக்கிறார்கள். அரச ஊழியர்கள் 60 வயதிற்கு பிறகு சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை போல் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட வயதை அடைந்ததன் பின்னர் ஓய்வு பெற வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிக்கப் போவதில்லை. 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் நம்பி நமக்கு நாமே குழி தோண்டிக் கொண்டோம்.

அரசியல்வாதிகள் எந்த கட்சிகள் ஊடாக வந்தாலும் நாட்டு மக்கள் ஆதரவளிக்க கூடாது, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கும் செல்ல வேண்டாம் என்பதை மக்களிடம் வலியுறுத்துகிறேன்.

இம்முறை வாக்கு அட்டை தயாரிக்கும் போது அதில் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்துகிறோம்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக காப்புறுதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை வெறுக்கத்தக்கதாகும் என்றார்.

No comments:

Post a Comment