மீனவர்களுக்காக தினமும் ஐந்து இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் : இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிப்பு : அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு தென் பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

மீனவர்களுக்காக தினமும் ஐந்து இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் : இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிப்பு : அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு தென் பகுதிக்கு கண்காணிப்பு விஜயம்

மீன்பிடி துறைமுகங்களுக்கு நாளாந்தம் சுமார் 5,00,000 லீற்றர் மண்ணெண்ணெய்யை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

மீனவர்களின் எரிபொருள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் இந்து ரத்னாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் இதற்காக சுமார் 27,000 மீன்பிடி படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த மீன்பிடி படகுகளில் பெரும்பாலானவை நாளாந்த மீன்பிடியில் ஈடுபடுவதுடன், கடந்த காலங்களில் அவர்கள் எதிர்கொண்ட பிரதான பிரச்சினை மண்ணெண்ணெய் தட்டுப்பாடாகுமென்றும் தெரிவித்தார்.

தெற்கிலுள்ள கடற்றொழில் துறைமுகங்களின் குறைபாடுகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் விசேட வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சின் செயலாளர் இந்து ரத்னாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் நேற்று தென்பகுதிக்கு விஜயம் செய்தனர்.

இவ்விஜயத்தின் போது, கிரிந்த கடற்றொழில் துறைமுகம் மற்றும் தங்காலை, புறாணவெல்ல, சுதுவெல்ல, கந்தர, மிரிஸ்ச உள்ளிட்ட கடற்றொழில் துறைமுகங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளை அடையாளம் காண்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகுமென்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அவர்களுக்கான நிவாரணம் உடனடியாக வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற தொழில்சார் பிரச்சினைகளை தீர்த்து வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காவே அன்றி பொழுதுபோக்கு சுற்றுலாவாக வரவில்லையென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது ஊடகங்களுக்கு பதிலளித்துள்ளார்.

அம்பாந்தோட்டையிலமைந்துள்ள கிரிந்த மீனபிடித் துறைமுகத்திற்கான விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment