(எம்.மனோசித்ரா)
போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தினாலேயே தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமைக்கமைய தேர்தலை நடத்த இடமளிக்க வேண்டும். உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக, அவற்றை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தினாலேயே அரசாங்கம் அதனை காலம் தாழ்த்துவதற்கு தற்போது புதிய உத்தியைக் கையிலெடுத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு பின்னர் அதற்கான தினத்தை அறிவிக்க முடியும் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆணைக்குழு அறிவித்துள்ளமைக்கமைய தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்க வேண்டும். அதனைவிடுத்து மேலும் தேர்தலை காலம் தாழ்த்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆகக் குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்கக் கூடிய விடயமாகும். ஆனால் ரணில் - மைத்திரி ஆட்சி காலத்திலேயே இந்த எண்ணிக்கை 8000 ஆக அதிகரிக்கப்பட்டது.
தற்போது இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமெனில் தொகுதிகள் குறைக்கப்பட வேண்டும். தொகுதிகளைக் குறைக்க வேண்டுமெனில் மீண்டும் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும்.
எல்லை நிர்ணயம் என்பது இலகுவான விடயமல்ல. இது சிக்கலான விடயம் என்பதால் நீண்ட கால அவகாசம் தேவைப்படும். எனவேதான் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் இதனை ஒரு உத்தியாகப் பயன்படுத்துகின்றது.
மாகாண சபைத் தேர்தலின் போதும் இதே உத்தியையே கையாண்டனர். உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்துவதற்கான உரிமை கிடையாது. காரணம் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல.
பேலியகொட மீன் சந்தையில் மீன்கள் விற்பனை செய்யப்படுவதை போன்று இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் விற்கப்படுகின்றனர். இதன் காரணமாக பாராளுமன்ற கலாசாரமும் சீரழிந்து போயுள்ளது.
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை திட்டமிட்டு காலம் தாழ்த்தியுள்ளனர். ரணில் - ராஜபக்ஷ ஆட்சி ஜனநாயகத்தை விரும்பவில்லை. உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமெனில் தேர்தலை நடத்தி அதன் பின்னர், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் இப்போதே உள்ளுராட்சி சபைகளை கலைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment