நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தண்டனை வழங்காமலிருக்க, அன்றையதினத்தில் உரிய காரணத்தை முன்வைக்குமாறு அவருக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (29) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான, நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுமினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமை அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்வைத்த கருத்துக்களில், நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் இதன் மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு தீங்கு விளைவித்ததாகவும் இரண்டு சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment