(எம்.எம்.சில்வெஸ்டர்)
அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த வர்த்தமானியானது பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறல் ஆகும். இந்த சட்டத்தை இல்லாமல் செய்வதாயின், பாராளுமன்றில் கொண்டு வந்து இல்லாமலாக்க முடியாது. உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுதான் தீர்க்க முடியும். மேலும், ராஜபக்சாக்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டினார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகயைில், "அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த வர்த்தமானியானது பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறல் ஆகும். அரசியலமைப்பின்படி கட்டடங்கள், விமானம், கப்பல் ஆகியவற்றுக்காவே இந்த பாதுகாப்பு வலயம் உள்ளடங்குவதாக அரசியலமைப்பின் 1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்கத்தின் அரச இரகசியங்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பாராளுமன்ற வளாகம், உச்ச நீதிமன்ற வளாகம், உயர் நீதிமன்ற வளாகம், கொழும்பு கோட்டை நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, விமான நிலைய தலைமையகம், அலரி மாளிகை, பிரதமரின் செயலாளர் காரியாலயம், பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதி ஆகியோரின் உத்தியோகப்பூர்வ இல்லம் ஆகியன அதி உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவை கடுமையான செயற்பாடாகும்.
இந்த சட்டத்தை இல்லாமல் செய்வதாயின், பாராளுமன்றில் கொண்டு வந்து இல்லாமலாக்க முடியாது. உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுதான் தீர்க்க முடியும் " என்றார்.
அரச ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.
உண்மையான தரவுகளையும் தகவல்களையும் வெளியிடுவதற்கு அரச ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் ஸ்ரீலங்கா கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment