இரவு பொருளாதாரம் இல்லாமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. விபசாரத்துக்கு அப்பாற்பட்டு பல விடயங்கள் உள்ளன. மக்கள் பகலில் சம்பாதிப்பதை இரவில் செலவு செய்யும் சூழலை நிச்சயம் ஏற்படுத்திக் கொடுப்பேன். இரவு 10 மணிக்கு பிறகு அறையில் உறங்குவதற்காக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரவில்லை. அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
மத கொள்கையை கடுமையாக பின்பற்றும் சவூதி அரேபியா புதிய சிந்தனைக்கமைய கசினோ சூதாட்டத்தை ஆரம்பிக்க உள்ள நிலையில் நாம் ஏன் புதிய சிந்தனைக்கமைய செயற்படக்கூடாது. கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இரவு பொருளாதாரம் தொடர்பில் நான் குறிப்பிட்டதை ஒரு சிலர் விபசாரம் என தவறாக நினைத்துக் கொண்டார்கள். இரவு பொருளாதாரத்தில் விபசாரம் என்பது ஒரு பகுதி மாத்திரமே. விபசாரம் 24 மணி நேரமும் இடம்பெறும் ஒரு வியாபாரமாகும். விபசாரத்துக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் உள்ளன.
இரவு பொருளாதாரத்தில் கசினோ சூதாட்டம், பல்பொருள் காட்சி கூடங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதற்குள் உள்ளடங்கும். மக்கள் பகலில் சம்பாதிப்பதை இரவில் செலவு செய்தால் அரசாங்கத்துக்கு அதிக வருமானம் கிடைக்கும்.
கஞ்சாவை பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்கினால் மாத்திரமே நாட்டில் ஏழ்மை இல்லாதொழிக்க முடியும், அதன் பின்னர் பலருக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தாராளமாக தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் முடியும்.
நாட்டில் மதுபானம் மற்றும் புகைத்தலுக்கு தடையில்லை. ஆனால் கஞ்சாவை தடை செய்து நாட்டுக்கான டொலர் கிடைப்பனவு தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கஞ்சாவை சட்டபூர்வமாக்கி நாட்டுக்கு அதிக டொலரை கொண்டு வருவேன்.
இரவு பொருளாதாரம் இல்லாமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. மக்கள் பகலில் சம்பாதிக்கும் பணத்தை இரவில் செலவிட ஒரு இடம் இல்லாமல் போனால் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற முடியாது. இரவு பொருளாதாரத்தை மேம்படுத்தாவிடின் தொடர்ந்து கடன் பெறும் நிலையே காணப்படும்.
இரவு 10 மணிக்கு பிறகு அறையில் உறங்குவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதில்லை. ஆகவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 24 மணி நேரமும் களியாட்ட விடுதிகள் திறந்துள்ளன. மத கோட்பாட்டை முறையாக பின்பற்றும் சவூதி அரேபியாவிலும் கசினோ களியாட்ட விடுதியை ஆரம்பிக்க அந்நாடு அவதானம் செலுத்தியுள்ளது. புதிய முறைமையின் கீழ் சவூதி அரேபியா சிந்திக்க ஆரம்பித்துள்ளது. ஆகவே நாமும் புதிய முறையில் சிந்தித்து சுற்றுலாத்துறைமை மேம்படுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment