அரசாங்கத்தில் பொருளாதார குற்றவாளிகள் இருக்கும் வரை எம்மால் அந்தக் குற்றங்களை முடிவிற்குக் கொண்டுவர முடியுமா ? - கபீர் ஹாசீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 29, 2022

அரசாங்கத்தில் பொருளாதார குற்றவாளிகள் இருக்கும் வரை எம்மால் அந்தக் குற்றங்களை முடிவிற்குக் கொண்டுவர முடியுமா ? - கபீர் ஹாசீம்

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் 'பொருளாதாரக் குற்றங்கள்' என்ற புதியதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றது. இருப்பினும் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இந்தப் பொருளாதாரக் குற்றங்கள் இப்போதேனும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றதா? தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதாரக் குற்றவாளிகள் அங்கம் வகிக்கும் வரையில் எம்மால் அந்தக் குற்றங்களை முடிவிற்குக் கொண்டுவர முடியுமா ? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தற்போது நாட்டின் கடன்களை மறுசீரமைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் இது குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டிய போதிலும், அதனை யாரும் செவிமடுக்கவில்லை.

மாறாக அப்போது நாம் கூறியதை செவிமடுத்திருந்தால் இன்று நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. எனவே நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு அரசாங்கம் நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டும்.

இப்போது 33 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைப்புச் செய்வதை இலக்காகக் கொண்டு பயணிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இதில் சுமார் 13.8 பில்லியன் டொலர்கள் இரு தரப்புக் கடன்களாகக் இருப்பதுடன் இவை மொத்தக் கடன் தொகையில் 34 சதவீதமாகும்.

இருப்பினும் அவற்றில் பெருமளவானவை சீனாவிற்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களாகும். சீனா இந்தக் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையில் இணைந்து கொள்ளுமா என்பது குறித்து இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டின் பின்னர் நாம் டொலர்களில் கடன் பெற்றாலும் அவற்றை ரூபாவாக மாற்றி அநாவசியமாகச் செலவு செய்து முடித்திருக்கின்றோம்.

இருப்பினும் டொலர்களில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்கு அவசியமான டொலர் வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு ஏதுவான செயற்திட்டங்கள் எவையும் தயாரிக்கப்படவில்லை.

ஆகையினாலேயே இன்றளவிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் 'பொருளாதாரக் குற்றங்கள்' என்ற புதியதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றது.

நீண்ட காலமாக இந்தப் பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்று வந்திருப்பதுடன், அவை இப்போதேனும் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றதா? என்ற எழுந்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதாரக் குற்றவாளிகள் அங்கம் வகிக்கும் வரையில் எம்மால் அந்தக் குற்றங்களை முடிவிற்குக் கொண்டுவர முடியுமா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்கள் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது பொருளாதார மறுசீரமைப்பு மாத்திரமே ஏற்படுத்தப்படுவதுடன், அது மக்கள்மீது மேலும் தாக்கத்தைத் தோற்றுவிக்கக் கூடிய வகையிலேயே அமைந்திருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment