முதல் வீடு துபாயில் பணி புரிபவருக்கு கையளிப்பு : 10% கழிவுடன் 40,000 டொலருக்கு விற்பனை : இவ்வருட இறுதிக்குள் 275,000 டொலர் இலக்கு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 28, 2022

முதல் வீடு துபாயில் பணி புரிபவருக்கு கையளிப்பு : 10% கழிவுடன் 40,000 டொலருக்கு விற்பனை : இவ்வருட இறுதிக்குள் 275,000 டொலர் இலக்கு

முனீரா அபூபக்கர் 

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் துபாயில் பணி புரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டைக் கொள்வனவு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (27) நகர அபிவிருத்தி அதிகார சபையின் வியத்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீடு, 40,000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகள் டொலர் மூலம் கொள்வனவு செய்யும் வசதியை மேற்கொள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தார்.

டொலர் மூலம் இவ்வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு 10% கழிவு வழங்கவும் தீர்மானிக்ப்பட்டுள்ளது.

துபாயில் பணி புரியம் இலங்கையரால் கொள்வனவு செய்யப்பட்ட, வியத்புர வீட்டுத் தொகுதியில் உள்ள 2 படுக்கையறைகளைக் கொண்ட குறித்த வீட்டின் பெறுமதி 158 இலட்சம் ரூபாவாகும். இந்த வீட்டை 10% கழிவுடன் 142 இலட்சம் ரூபாவுக்கு அவர் கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் தொழில் புரியும் பலர் இந்த வீடுகளைக் கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் 275,000 அமெரிக்க டொலர்களை எதிர்பார்த்துள்ளதாக, ஈட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இது தொடர்பான 2 திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பொரளை ஓவல் வியூ திட்டம் 608 வீடுகளைக் கொண்டுள்ளதோடு, அங்கொடை லேக் ரெஸ்ட் திட்டம் 500 வீடுகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலும் 12 நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன் மூலம் 3,667 வீடுகள் நிர்மாணிக்கப்படுமென குறிப்பிட்டார்.

உரிய முறையில் வங்கிகள் ஊடாக வெளிநாட்டு பணத்தை அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு, இவ்வீட்டுத் திட்டங்களை கொள்வனவு செய்யும் போது முன்னுரிமை வழங்குவது தொடர்பில அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment