(இராஜதுரை ஹஷான்)
விவசாயத்துறையின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும், விவசாயத்துறையுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும். எவரும் பொறுப்புக் கூறலில் இருந்து விடுபட முடியாது. உணவு பற்றாக்குறைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து தீர்வு காண முடியாது என்பதற்காகவே பொதுமக்கள் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சிறுபோக விவசாயம் மற்றும் உணவுப் பற்றாக்குறை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பல்வேறு காரணிகளினால் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. மூடிய பொருளாதார கொள்கையினை தொடர்ந்து செயற்படுத்தியிருந்தால் இன்று நாடு கௌரவமான முறையில் இருந்திருக்கும்.
அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கத்தினால் மூடிய பொருளாதார கொள்கைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனதன் விளைவை தற்போது எதிர்கொள்கிறோம்.
விவசாயத்துறையின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும், விவசாயத்துறையுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும்.
விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினை ஓரிரு மாதங்களில் சீர் செய்ய முடியாது. மூன்று வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத மக்கள் வாழும் சூழ்நிலை தோற்றம் பெற்றுள்ளது.
கையிருப்பில் உள்ள அரிசி எதிர்வரும் செம்டெம்பர் மாதம் வரை போதுமானதாக உள்ளது. உரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையினால் சிறுபோகத்தின் விளைச்சலை சிறந்த முறையில் எதிர்பார்க்க முடியாது.
விவசாயத்துறை நிபுணர்கள் இம்முறை சிறுபோக விவசாயத்தின் விளைச்சல் 50 சதவீதத்தை காட்டிலும் குறைவடையும் என எதிர்வு கூறியுள்ளார்கள்.
உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சவாலை அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து வெற்றி கொள்ள முடியாது. பொதுமக்கள் அனைவரும் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும்.
பொதுமக்கள் தமக்கான தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொண்டால் அது பிறிதொரு தரப்பினருக்கு சாதகமாக அமையும்.
சந்தையில் யூரியாவின் விலை நியாயமற்ற வகையில் பேணப்படுவதை அவதானிக்க முடிகிறது. தனியார் தரப்பினரது விற்பனை விலையை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது.
யூரியா நிறுவனங்களுக்கு மாத்திரம் அரசாங்கம் மில்லியன் கணக்கு நிலுவை தொகையினை செலுத்த வேண்டியுள்ளது.
இந்தியாவில் இருந்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது.
குறித்த உரத் தொகை கிடைக்கப் பெற்றவுடன் ஒரு மூட்டை யூரியா உரத்தை 10000 ரூபாவிற்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரும்போக விவசாய விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது நிவாரணம் வழங்க முடியாது ஏனெனில் அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment