ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை டலஸ் ஆரம்பித்துள்ளமை அரசியலிலும் ஜனநாயகத்திலும் தென்பட்டுள்ள சிறந்த அறிகுறி : சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட முடியும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது - சம்பிக ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை டலஸ் ஆரம்பித்துள்ளமை அரசியலிலும் ஜனநாயகத்திலும் தென்பட்டுள்ள சிறந்த அறிகுறி : சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட முடியும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது - சம்பிக ரணவக்க

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் அரசாங்கத்திலிருந்து விலகி, ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை ஆரம்பித்துள்ளமையானது அரசியலிலும் ஜனநாயகத்திலும் தென்பட்டுள்ள சிறந்த அறிகுறியாகும். நாட்டுக்கு புதிய அரசியல் சக்தியொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. அதற்கு நாமும் தயார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரம், தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பான யோசனைகளை கையளிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்கு புதிய அரசியல் சக்தியொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. அதற்கு நாமும் தயார். நாடும் தயார். குறிப்பாக நாட்டின் இளம் தலைமுறையினர் அதற்கு தயாராக உள்ளனர். அதற்கு உதவ வேண்டுமல்லவா? கட்சிகளுடன் இணைந்து அன்றி பொது கொள்கையின் அடிப்படையில் வேலைத்திட்டங்களின் ஊடாக வங்குரோத்தடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தொழிற்சங்க ரீதியிலான தலையீட்டை நாடு கோரியுள்ளது.

அதே போன்று இளைஞர்களும் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கோரியுள்ளனர். இதனை ஏற்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் திருடர்கள் என்று நாம் நம்பவில்லை. பாராளுமன்றத்தில் ஆளும் , எதிர்க்கட்சிகள் என சகல தரப்பிலும் முக்கியத்துவமுடைய அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களுடன் , வெளியிருப்பவர்களையும் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக இணைக்க வேண்டியுள்ளது.

ராஜபக்ஷ குடும்பவாதத்திலிருந்து விலகி சுதந்திரமாக சிந்திக்கும் தரப்பினர் அந்த கட்சிக்குள்ளிருந்து உருவாகுவதானது அரசியலிலும் ஜனநாயகத்திலும் தென்பட்டுள்ள சிறந்த அறிகுறியாகும். அது ஆளுங்கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் குடும்பமொன்றின் ஆதிக்கம் இன்றி உருவாகுவது சிறந்ததாகும்.

தற்போதுள்ளது சர்வ கட்சி அரசாங்கமும் அல்ல. இடைக்கால அரசாங்கமும் அல்ல. பழைய அதிகாரிகளே உள்ளனர். அவ்வாறன்றி தொழிற்துறை நிபுணர்களுக்கு வாய்ப்பளித்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்காலத்தில் இதனை விட பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் நாம் அமைதியாக இருக்கப் போவதில்லை.

ஜூலை முதல் வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்ட முடியும். எனினும் அதன் ஊடாக எமது எவ்வித பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. எனவே அந்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வரை தொழிற்துறையினருடன் இணைந்து உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment