இலங்கை, பிரித்தானியா விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டதா? உண்மை என்ன? - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

இலங்கை, பிரித்தானியா விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டதா? உண்மை என்ன?

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றும், பிரித்தானியா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றும் துருக்கி வான் பரப்பில் மோதி, விபத்துக்குள்ளாகவிருந்ததாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவிக்கின்றது.

நடந்தது என்ன?
லண்டன் நகரிலிருந்து கடந்த 13ஆம் திகதி கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்-504 விமானமும், பிரித்தானிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமும் துருக்கி வான் பரப்பில் நேருக்கு நேர் மோதி, விபத்துக்குள்ளாகவிருந்த சந்தர்ப்பத்தை, ஸ்ரீலங்கன் விமான சேவை விமானிகள் தவிர்த்தனர் என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

275 பயணிகளுடன் 33,000 அடி உயரத்தில் இந்த விமானம் துருக்கி வான் பரப்பிற்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில், விமானத்தை 35,000 அடி உயரம் வரை பயணிக்குமாறு, ஆங்காரா விமான கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஆங்காரா விமான கட்டுப்பாட்டு மையத்தின் அறிவித்தலுக்கு அமைய, 35,000 அடி உயரத்திற்கு விமானத்தை செலுத்தியிருக்கும் பட்சத்தில், பிரித்தானிய விமானத்துடன், ஸ்ரீலங்கன் விமானம் மோதியிருக்கும்.

எனினும், ராடர் கட்டமைப்பில் மற்றுமொரு விமானம் அதே உயரத்தில் பறந்ததை, ஸ்ரீலங்கன் விமான சேவை விமானிகள் அடையாளம் கண்டு, ஆங்காரா விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விமானத்தை 35,000 அடி உயரத்தை நோக்கி பயணிக்க வேண்டாம் என ஆங்காரா விமான கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது என்றும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இவ்வாறு 35,000 அடி உயரத்திற்கு விமானம் உயரத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், பிரித்தானியாவிற்கு சொந்தமான விமானத்துடன் மோதி, பாரிய விபத்தொன்று நேர்ந்திருக்கும் எனவும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் அந்த விபத்தை தவிர்த்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.

இதில் உண்மை இல்லை
எனினும், ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவிக்கின்றது.

லண்டனிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யூ.எல்-504 விமானத்தின் விமானிகள், விமானத்தை எந்தவித ஆபத்தும் இன்றி செலுத்துவதை தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உறுதிப்படுத்துவதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூறுகின்றது.

எனினும், ஊடக செய்தியில் வெளியாகியுள்ள விதத்தில், மற்றுமொரு விமானத்துடன் மோதுவதற்கான சந்தர்ப்பம் எந்த விதத்தில் ஏற்படவில்லை என நிறுவனம் குறிப்பிடுகின்றது.

விமானத்தில் காணப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் விமானத்தை, பாதுகாப்பாக செலுத்துவதை தாம் உறுதிப்படுத்துவதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் தெரிவிக்கையில், ''கடந்த 10 அல்லது 20 வருடங்களாக விமானங்களில் அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்பொன்று உள்ளது.

விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் அதே ஓடு பாதை அளவில், சுமார் 10 அல்லது 15 கிலோ மீட்டர் தொலைவில் மற்றுமொரு விமானம் பயணித்துக் கொண்டிருக்குமானால், இந்த கட்டமைப்பு தன்னிச்சையாகவே செயல்பட ஆரம்பிக்கும்.

இரண்டு விமானங்களிலும் உள்ள விமானிகளுக்கு, விமான விபத்தை தவிர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இதனூடாக ஏற்படுத்தப்படும். இந்த விமானத்தில், குறிப்பிட்ட தொழில்நுட்ப கட்டமைப்பு செயற்பட்டிருக்கவில்லை.

இந்த செய்தியில் கூறப்பட்ட சில விடயங்களில் உண்மை இருக்கின்றது. எனினும், விமானங்கள் மோதிக் கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை" என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment