இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளோம் : முதலீட்டின் நோக்கம், தேவையை நிவர்த்தி செய்து உறவை பலப்படுத்துவதே - அதானி குழுமம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 14, 2022

இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளோம் : முதலீட்டின் நோக்கம், தேவையை நிவர்த்தி செய்து உறவை பலப்படுத்துவதே - அதானி குழுமம்

இலங்கையில் எரிசக்தி திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயல்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறியமை தொடர்பில், எழுந்துள்ள பெரும் சர்ச்சை தொடர்பில், தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்குழுமத்தின் பேச்சாளர் இந்திய ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் முதலீடு செய்வதில் எமது நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும். ஒரு பொறுப்பான நிறுவனமாக, இரு நாடுகளும் எப்போதும் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மையின் அவசியமான பகுதியாக இதைப் பார்க்கிறோம். இது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து நாம் ஏமாற்றமடைந்துள்ளோம். உண்மை என்னவென்றால், இந்த பிரச்சினை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தால் மற்றும் அதற்குள்ளேயே தீர்க்கப்பட்டுள்ளது,” என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, கோப் குழு முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னிலையாகி, மன்னார் காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுத்ததாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்ததாக கூறியிருந்தார்.

இதேவேளை, மன்னாரில் நிர்மாணிக்க திட்டமிடட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை கையளிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அழுத்தங்களை விடுக்கவில்லை எனவும், பெர்டினாண்டோவின் கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முற்றாக மறுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை (11) மீண்டும் குறித்த கருத்தை தான் வாபஸ் பெறுவதாக எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிவித்திருந்ததோடு, நேற்றையதினம் (13) அவர் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

மன்னார் மாவட்டத்தில் 500 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின்சக்தி திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ கோப் குழுவில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வைரலாக பரவியிருந்த நிலையில், தற்போது குறித்த விடயம் தொடர்பில் அதானி குழுமம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment