வருட இறுதிக்குள் 8 இலட்சம் சுற்றுலா பயணிகள் மூலம் 800 மில்லியன் டொலர் எதிர்பார்ப்பு : சுமார் 1.5 மில்லியன் உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நீண்ட காலத் திட்டம் : எதிர்வரும் 6 மாதங்களில் இந்திய சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 14, 2022

வருட இறுதிக்குள் 8 இலட்சம் சுற்றுலா பயணிகள் மூலம் 800 மில்லியன் டொலர் எதிர்பார்ப்பு : சுமார் 1.5 மில்லியன் உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நீண்ட காலத் திட்டம் : எதிர்வரும் 6 மாதங்களில் இந்திய சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை

இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (14) சுற்றுலாத் துறையின் பங்குதாரர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடிய போது அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டளவில் இலங்கை 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு 3.5 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் நிலையில், சுமார் 1.5 மில்லியன் உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இதற்காக கூட்டங்கள், ஊக்குவிப்பு நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) போன்றவற்றை நடாத்தவும் ஆலோசனை.

ஹோட்டல் துறையில் உள்ள பல ஊழியர்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதாலும், நாட்டில் உள்ள ஹோட்டல் கல்லூரிகளுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாலும் இளைஞர்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உள்ளூர் கலாச்சாரங்களில் ஈடுபாடுள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதற்குமாக, கலாசார விழாக்களை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் காலி இலக்கிய விழாவை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு அரச சுற்றுலாத்துறை அதிகாரிகளை பிரதமர் வலியுறுத்தினார்.

இதன் போது, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோ கருத்து தெரிவிக்கையில், சுற்றுலா தொடர்பில் தற்போது இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்துவதற்கு இராஜதந்திர சமூகத்துடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார். 

இந்திய சுற்றுலா பயணிகளை மையமாக வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்களுடன் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், சுற்றுலா அமைச்சின் பிரதிநிதிகள், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபை, இலங்கை ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா நிறுவனம், இலங்கை ஹோட்டல் சங்கம், இலங்கை உள்நாட்டு சுற்றுலா ஆர்வலர்கள் சங்கம், சிலோன் ஹோட்டல் பாடசாலை பட்டதாரிகள் சங்கம், இலங்கை தொழில்சார் கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் ஒழுங்கமைப்பாளர்கள் சங்கம், சிறு மற்றும் நடுத்தர சுயதொழில் பிரிவு ஆகியன பங்கேற்றிருந்தன.

No comments:

Post a Comment