நைஜீரியாவின் தேவாலயம் ஒன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெடி குண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் ஓண்டோ மாநிலத்தில் உள்ள ஓவோ நகரில் புனித பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை விசேட ஆராதனையின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீரென தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பில் சிக்கி, சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த தாக்குதலைத் தொடர்ந்து மர்ம நபர்கள் தேவாலயத்தின் பிசொப் மற்றும் பாதிரியாரை, கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் குறித்த இருவரும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, வழிபாட்டாளர்கள் மீதான இகடகொடூரமான கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"நெதர் பிராந்தியத்தைச் சேர்ந்த அயோக்கியர்கள் மட்டுமே இதுபோன்ற கொடூரமான செயலை திட்டமிட்டு செய்திருக்க முடியும். எதுவாக இருந்தாலும், இந்த நாடு ஒருபோதும் தீயவர்களுக்கு அடிபணியாது, இருள் ஒருபோதும் ஒளியை வெல்லாது. இறுதியில் நைஜீரியா வெற்றி பெறும்” என்று ஜனாதிபதி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்வதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை என்பதுடன், சம்பவம் குறித்து ஒண்டோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, நைஜீரியாவின் பெரும்பாலான பிரதேசங்களில் பாதுகாப்புப் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், ஒண்டோ மாநிலம் நாட்டின் மிகவும் அமைதியான மாநிலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
No comments:
Post a Comment