வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ. 64 மில்லியன் ரூபா கப்பம் கோரியமை மற்றும் அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு, 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை மற்றும் 25 மில்லியன் ரூபா அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தார்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றமை தொடர்பான ஆவணத்தில் கையொப்பமிட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என அறிவித்து மேல் நீதிமன்ற நீதிபதி இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.
25 மில்லியன் ரூபா அபராதத்தை விதித்த நீதிபதி, அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 09 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈட்டை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஏனைய அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிரதிவாதி விடுவிக்கப்பட்டதோடு, ஏனைய பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதியின் சாட்சி விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 06 - ஜூன் 02ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் கொலன்னாவை, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள காணியில் அனுமதியற்ற ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி அக்காணிகளை நிரப்புமாறு ஜெரார்ட் மென்டிஸ் எனும் வர்த்தகரை தொலைபேசி மூலம் அச்சுறுத்தி ரூ. 64 மில்லியன் ரூபா கோரியமை தொடர்பில், அப்போதைய மேல் மாகாண முதலமைச்சரான பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் பாரிக் ஆகிய மூவர் மீது, கடந்த அரசாங்கத்தின் போது , அப்போதைய சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள நரேஷ் பாரிக் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதால், அவர் இல்லாமலேயே இவ்வழக்கைத் தொடர நீதிமன்றம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் தற்போது குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment