(நா.தனுஜா)
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறுகின்றார். ஆனால் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை நாமே முதன்முதலாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். இருப்பினும் அது ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் வகையிலான திருத்தமல்ல என்று சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்ற, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கூடிய சரியான 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் பதவி வகிக்கின்ற போதிலும், இதன் ரிமோட் (இயக்கி) கப்புடாவிடமே (பசிலிடமே) இருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமக்கு நெருக்கமானவர்களுக்குப் பெருமளவான வரிச் சலுகைகளை வழங்கியது. அதன் விளைவாக நாட்டின் தேசிய வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்தது.
இருப்பினும் இந்த வரிக் குறைப்பின் மூலம் சந்தையில் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டதா? என்று நாம் அப்போது கேள்வி எழுப்பினோம். ஆனால் அந்த வரிச் சலுகைகளால் சாதாரண மக்களும், நாடும் எவ்வகையிலும் நன்மையடையவில்லை. மாறாக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் மாத்திரம் மிகக்குறுகிய காலத்தில் பெருந்தொகைப் பணத்தை சம்பாதித்துக் கொள்வதற்கு வாய்ப்பேற்பட்டது.
இவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள், நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது.
இப்போது மீண்டும் புதிதாக வரி அறவீடுகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்ட வரிச் சலுகைகளால் பயனடைந்த பெருவணிகர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவாறான வரி அறவீடுகள் இதிலடங்குவதாக எமக்குத் தோன்றவில்லை. மாறாக வரிச் சலுகைகள் தேவைப்படும் தரப்பினரே மீண்டும் வரிச் சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
அடுத்ததாக நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி பயில்வதை விடவும் 'சூம்' போன்ற ஏதேனுமொரு தொழில்நுட்பத்தின் மூலம் வீடுகளிலிருந்து கல்வி கற்பது நாட்டிற்கு உகந்ததாகும். ஆனால் அரசாங்கம் அத்தகைய நவீன தொழில்நுட்பம் மூலமான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அத்றகு முற்றிலும் மாறான விதத்திலேயே செயற்பட்டு வருகின்றது.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டதும், அவர் நாட்டிற்கு டொலரைக் கொண்டுவருவார் என்று பலர் கருதினார்கள். ஆனால் இங்கு அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது என்ற விடயம் சர்வதேச நாடுகளுக்குக் காண்பிக்கப்படும் வரையில் ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமன்றி, எந்தவொரு தரப்பினராலும் டொலரைக் கொண்டுவர முடியாது.
அதேபோன்று தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையில் எமது தரப்பிலிருந்து சென்ற இருவர் மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரைத் தவிர ஏனைய அனைவரும் பழைய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களேயாவர். எனவே இது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத, தூய்மையற்ற அரசாங்கமாகும்.
மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக பல்வேறு இடங்களிலும் ஒழிந்துகொண்டிருந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஒரு வார காலத்திற்குள் ரணில் விக்ரமசிங்க ஒட்சிசன் வழங்கி விட்டார். எனவே இவ்வாறு நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கிப் பயணிக்க முடியாது.
இவ்வாறானதொரு பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற தரப்பினர் எம்மீதும், எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீதும் சேறுபூசுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அக்கட்சியின் உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறுகின்றார். ஆனால் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை நாமே முதன்முதலாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.
இருப்பினும் அது ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் வகையிலான திருத்தமல்ல. எனவே எம்மீது அநாவசியமாகக் குற்றஞ்சாட்ட வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
அதுமாத்திரமன்றி அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்ற, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கூடிய சரியான 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
அத்தோடு ஒட்டு மொத்த ராஜபக்ஷ குடும்பத்தையும் வீட்டிற்கு அனுப்பக் கூடியவாறான செயற்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment