நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை, எவரும் அச்சமடைய வேண்டாம் என்கிறார் அமரவீர : இறக்குமதியாகும் அரிசி ச.தொ.சவில் 200 ரூபாவுக்கும் குறைவான விலையில் - News View

About Us

About Us

Breaking

Friday, June 10, 2022

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை, எவரும் அச்சமடைய வேண்டாம் என்கிறார் அமரவீர : இறக்குமதியாகும் அரிசி ச.தொ.சவில் 200 ரூபாவுக்கும் குறைவான விலையில்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதுடன் இந்த மாதத்தில் மேலும் 65,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இதுவரை 39 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது நெல் சந்தைப்படுத்தும் சபையின் வசமுள்ள நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைபாடு ஏற்பட்டால் மேலும் அரிசியை இறக்குமதி செய்ய முடியும். அதனால் அரிசி, பருப்பு,சீனி போன்ற பொருட்களை தேவைக்கு அதிகமாக சேகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் பெறப்படும் அரிசியையும் ச.தொ.ச மூலம் மக்களுக்கு 200 ரூபாவுக்கு குறைவாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் நாம் எதிர்பார்த்ததற்கு மேலதிகமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டு விவசாயிகள் தயாராக உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உரம், விதைகள் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியுமானால் நாம் வெளி நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

தற்போது 11,150 மெட்ரிக் தொன் யூரியா உரம் உட்பட மேலும் பல வகை உரம் கையிருப்பில் உள்ளது. மேலும் உரம் இறக்குமதிக்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியால் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியையும் அமைச்சரவை வழங்கியுள்ளது.

அதேபோன்று விவசாயிகளுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள 248 விவசாய அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர் வரும் பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் பெரும்போக அறுவடை மூலம் நாட்டுக்கு போதுமான நெல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரிசி விலை உயரும். அரிசி 500 ரூபாவாக அதிகரிக்கலாம் என சிலர் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் மக்கள் அதிகளவு அரிசியை சேகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

அவ்வாறு அரிசியை சேகரித்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த அரிசி பாவனைக்கு உதவாகாமல் போகும் இதனை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment