காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள மலேசிய முன்னணி கிரிக்கெட் மைதானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள மலேசிய முன்னணி கிரிக்கெட் மைதானம்

(என்.வீ.ஏ.)

மலேசியாவில் உள்ள முன்னணி கிரிக்கெட் மைதானமான கின்ராரா ஓவல் மைதானம் ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மலேசியா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் மைதானம் அமைந்துள்ள இடத்தின் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான 18 வருட ஒப்பந்தம் ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதால் இந்த மைதானம் மூடப்படவுள்ளது.

அண்மைக் காலமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் கொடுப்பனவு தொடர்பாக முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகராறுகளை அடுத்து இந்த விடயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக விசாரணைகளை நடத்திய நீதிமன்றம் வழக்கு தீர்ப்பை காணி உரிமையாளர்களுக்கு சாதகமாக வழங்கியது.

நிலுவையில் இருந்த கொடுப்பனவுகள் யாவும் செலுத்தப்பட்டு இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக மலேசியா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மைதானம் மூடப்படுவதற்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் போட்டி ஜூன் 1ஆம் திகதியிலிருந்து ஜூன் 10ஆம் திகதிவரையும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 15ஆம் திகதியிலிருந்து ஜூன் 25ஆம் திகதிவரையும் நடத்தப்பவுள்ளன.

அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான வழிகாட்டி போட்டியாக 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி அமையவுள்ளது.

கின்ராரா மைதானத்துக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் மலேசிய கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளக உறுப்பினர்களுக்கு இடையில் ஜூன் 10ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

கின்ராரா மைதானம் காணி உரிமையார்களிடம் ஜூன் 30ஆம் திகதி ஒப்படைக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment