சகல நிலைமைகளும் கைமீறிவிட்டன : ஜனாதிபதியிடமே அனைத்து விடயங்களுக்கும் தீர்வு உள்ளது - விஜயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

சகல நிலைமைகளும் கைமீறிவிட்டன : ஜனாதிபதியிடமே அனைத்து விடயங்களுக்கும் தீர்வு உள்ளது - விஜயதாஸ ராஜபக்ஷ

(ஆர்.ராம்)

பொருளாதார, அரசியல் நெருக்கடிகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து எதிர்மறையான நிலைமைகளும் கைமீறிவிட்டன என்று சுட்டிக்காட்டிய கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடத்திலேயே உக்கிரமடைந்து வரும் அனைத்து விடயங்களுக்குமான தீர்வு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போத அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தில் நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்ட தருணத்தில் அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசியல் ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதனை நான் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியிடத்தில் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம். அச்சமயத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்த விடயத்தினை பொருட்டாகக் கொள்ளவில்லை. அதன் பின்னர் நிலைமைகள் நாளுக்குநாள் மோசமடைய ஆரம்பித்தன.

பொருளாதார நிலைமைகள் இறுக்கமான கட்டத்தினை அடைந்தது ஒருபுறமிருக்கையில் காலி முகத்திடர் தொடர் போராட்டங்கள் உடப்பட பொதுமக்கள் வீதிக்கு இறங்கினார்கள். தற்போது அந்தப் போராட்டங்கள் முழு வீச்சினை அடைந்து விட்டன.

இந்த நிலையில் கூட, 21 ஆவது திருத்தச் சட்டத்தினை தற்காலிக ஏற்பாடாக கொண்டுவருவதற்கான வரைவொன்றை தனி நபர் பிரேரணையாக நான் உள்ளிட்ட எமது அணியினர் சபாநாயகரிடத்தில் கையளித்துள்ளோம். ஆனால் அதுசம்பந்தமாக அரசாங்கம் கூடிய கரிசனை கொண்டதாக இல்லை.

தற்போது கூட ஜனாதிபதி சர்வ கட்சிகளின் பங்கேற்புடனான இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கின்றார். ஆனால், எதிர்க்கட்சி இந்த செயற்றிட்டத்தில் இணைவதற்கு தயாரில்லை. ஆகவே இந்த முயற்சி வெற்றி அளிக்குமா என்று திடமாக நம்பிக்கை கொள்ள முடியாது.

எதிர்க்கட்சி சாவல்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய திராணியைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி சவால்களுக்கு முகங்கொடுக்காது, தனது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எதிரணியில் இருக்கும் ஏனைய கட்சிகளும் அவ்விமான மனோநிலையையே கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பார்க்கின்றபோது நாட்டின் நெருக்கடிகளுக்கு சுமூகமான தீர்வுகளைக் காணும் காலங்கடந்துவிட்டது. அனைத்து நிலைமைகளும் கைமீறிவிட்டன.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவிடத்திலேயே தீர்வுக்கான இறுதித் தீர்மானம் உள்ளது. நிறைவேற்று அதிகாரமுறை ஜனாதிபதியிடத்தில்தான் இறுதித் தீர்மானம் உள்ளது. அவர் பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கப்போகின்றாரா? புதிய பிரதமர் தலைமையில் அரசாங்கத்தினை அமைக்கப் போகின்றாரா? இல்லை போராட்டக் காரர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக தான் பதவி விலகப் போகின்றாரா? என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.

ஆவ்வாறில்லாது காலதாமதப்படுத்தப்படுமாயின் நிலைமைகள் மேலும் உக்கிரமடையும். தற்போது மேலெழுந்துள்ள 225 பேரும் தேவையில்லை என்ற மக்களின் மனோநிலை மேலும் வலுப்பெற்று போராட்டங்கள் தீவிரமடையும் என்றார்.

No comments:

Post a Comment