(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்றுடன் 23 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் காலி முகத்திடல் போராட்டத்தில் போராட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கருப்பு கொடிகளை ஏற்றி, செந்நிற ஆடையணிந்து அரசியல் தலையீடுகள் இன்றி இங்கு மே தினக் கூட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் அலளி மாளிகை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒரு வாரமாகத் தொடர்கிறது.
எவ்வாறிருப்பினும் இங்கிருந்து ஆர்ப்பாட்டக் காரர்களை களைப்பதற்கு தொடர்ந்தும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரால் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் பொலிஸாருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.
பின்னர் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து தற்காலிக கூடாரங்களை மறுபுறத்தில் அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். எவ்வாறிருப்பினும் இரவு முழுவதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கிருந்து செல்லவில்லை.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அலரி மாளிகை ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்கள் பெருமளவானோர் பேரணியாகச் சென்று அதில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு இணைந்த இரு தரப்பினரும் பிரதான வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். அதனையடுத்து தற்காலிக கூடாரங்கள் வீதியின் மறுபுறத்தில் மாற்றி அமைக்கப்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment